ஸாஹிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மஇகா பிரதமரிடம் அதிருப்தியை தெரிவிக்குமா? குலசேகரன் கேள்வி - SELANGOR POST

728x90 AdSpace

Latest News
Saturday, April 22, 2017

ஸாஹிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மஇகா பிரதமரிடம் அதிருப்தியை தெரிவிக்குமா? குலசேகரன் கேள்வி


கோலாலம்பூர், ஏப்ரல் 21: இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு ஓடிவந்துள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாஹிர் நாயக்கிற்கு அரசாங்கம் நிரந்தர வசிப்பிட
அந்தஸ்து வழங்கியுள்ளது குறித்து மஇகா பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் தனது அதிருப்தியை தெரிவிக்குமா என்று ஜனநாயக செயல் கட்சியின் உதவித் தலைவர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

நேற்று தலைநகரில் நடைபெற்ற 2050ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய உருமாற்றத் திட்டம் மீதான கலந்துரையாடலில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், நிரந்திர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்றுள்ள ஸாஹிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடமில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் இந்நாட்டில் இஸ்லாத்தின் மேம்பாட்டிற்கு எந்த வகையிலும் உதவியாக இருக்க மாட்டார் எனவும் அவர் கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியிருந்ததில் எனக்கு கொஞ்சம்கூட திருப்தி இல்லை. காரணம் அவருக்கு நிரந்திர வசிப்பிட அந்தஸ்து கொடுத்த அரசாங்கத்திற்கு எதிராக மஇகா என்ன செய்யப் போகிறது என்பது குறித்து அவர் ஒன்றும் விளக்கவில்லை என்றார்.

இதற்கு எதிராக மஇகா என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறது என்றே மக்கள் குறிப்பாக இந்திய சமூகத்தினர் தெரிந்துக் கொள்ள விரும்புகின்றனர். மாறாக, அதுகுறித்து கருத்துரைப்பதை அல்ல என்று அவர் சொன்னார்.

ஸாஹிர் நாயக்கிற்கு வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் அல்லது அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஏன் டாக்டர் சுப்பிரமணியம் கேட்கவில்லை என்றும் குலசேகரன் வினவினார்.

நான் டாக்டர் சுப்பிரமணியத்திடம் 3 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதலாவது, இந்நாட்டில் பல ஆயிரம் இந்தியர்கள் சிவப்பு நிற அடையாள அட்டையுடன் குடியுரிமைக்காகவும், நிரந்திர வசிப்பிட அந்தஸ்துக்காகவும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஸாஹிர் நாயக்கிற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அவ்வாறு அவருக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து மஇகா பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமும், உள்துறை அமைச்சிடமும் தனதுஅதிருப்தியைவெளிப்படுத்தியதா?

இவ்விவகாரத்தை டாக்டர் சுப்பிரமணியம் அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பி, ஸாஹிர் நாயக்கிற்கு வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை ரத்து செய்வாரா? என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

இந்தியா கறுப்புப் பண மாற்றும் நடவடிக்கையிலும், தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக இந்தியாவின் தேசிய விசாரணைப்பிரிவின் விசாரணைக்கு ஸாஹிர் நாயக் ஆளாகியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்துக் கடவுளை இழிவுப்படுத்தியதற்காகவும், இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதற்காகவும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வந்தார்.

அல்காய்டா தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததற்காக பிரிட்டன், கனடாவிற்குள் நுழைவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரவா மாநிலத்திற்குள் நுழைவதற்கும் ஸாஹிர் நாயக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. –தி மலேசியன் டைம்ஸ்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

AMARAN!!!! Komen jahat akan di padam,

Item Reviewed: ஸாஹிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மஇகா பிரதமரிடம் அதிருப்தியை தெரிவிக்குமா? குலசேகரன் கேள்வி Rating: 5 Reviewed By: Johari Seman