காச நோய் கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு - SELANGOR POST

728x90 AdSpace

Latest News
Saturday, April 22, 2017

காச நோய் கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 21: இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் காசநோயை கண்டறிய சுகாதார அமைச்சு அதிக சாத்தியமுள்ள பகுதிகளிலிருந்து 350 ஆயிரம் மலேசியர்கள் மற்றும் அந்நிய நாட்டினர் மீது மருத்துவ சோதனையை மேற்கொண்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் 23 ஆயிரம் காசநோய் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாக அவர் சொன்னார். அவற்றில் 13 விழுக்காடு அந்நிய நாட்டவர்களை உட்படுத்திய சம்பவங்களாகும்

நாடு முழுவதும் சுகாதார அமைச்சு தனிநபர்களை உட்படுத்திய சுகாதார தொடர் பரிசோதனைகளை கட்டம் கட்டமாக மேற்கொள்ள இலக்கு கொண்டுள்ளது. அதிகரித்து வரும் காச நோய் சம்பவங்களைக் குறைக்க அந்த சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுப்ரா கூறினார்.

காச நோய் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு சுகாதார சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காச நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் முக்கிய நோக்கத்தில் தேசிய காச நோய் கட்டுப்பாட்டு வியூக திட்டத்தை சுகாதார அமைச்சு வகுத்து வருகிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலான இத்திட்டத்தின் வாயிலாக நாட்டில் காச நோயைக் கட்டுப்படுத்த முடியும் என சுப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நோயை அடையாளம் கண்டு தகுந்த சிகிச்சை அளிப்பது அது சார்ந்த முயற்சிகளில் அரசாங்க- அரசு சார்பற்ற அமைப்புக்கள், தனியார் மருத்துவ துறையினர் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு, காச நோயைத் தடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றை அத்திட்டம் உள்ளடக்கியிருக்கும் என அவர் சொன்னார்.

மேலும், காச நோயைக் கட்டுப்படுத்த விவேகமாக புதிய முயற்சிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கவும் சுகாதார அமைச்சு தேசிய காச நோய் கட்டுப்பாட்டு வியூக திட்டத்தை வரைவதாக சுப்ரா தெளிவுபடுத்தினார்.

நாட்டில் 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு காச நோயாளிகளின் எண்ணிக்கை ஆறு விழுக்காடு அதிகரித்தது. 2015-ஆம் ஆண்டில் 24-ஆயிரத்து 220-ஆக இருந்த காச நோயாளிகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 25-ஆயிரத்து 739-ஆக அதிகரித்தது. அதோடு, காச நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

2015-ஆம் ஆண்டு ஆயிரத்து 696 பேர் உயிரிழந்த வேளையில் கடந்தாண்டு அந்த எண்ணிக்கை ஆயிரத்து 945-ஆக அதிகரித்தது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணையத்துள்ள இலக்கை அடைவதற்கு மலேசியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் கடந்தாண்டு முழுவதும் பதிவான காச நோய் சம்பவங்களில் 30 விழுக்காடு, அந்நிய நாட்டினரைச் சார்ந்தது என சுகாதாரத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹயா கூறியுள்ளார். மலேசியாவை வந்தடையும் அந்நிய நாட்டினரில் காச நோய் கண்டவர்கள் உடனடியாக அவர்களின் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழையும் காச நோய் கண்ட அயல்நாட்டினருக்கு, குணமடையும் வரையில் தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக அவர் சொன்னார். சபாவுக்கு அடுத்தபடியாக சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அதிகமான காச நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், காச நோய்க்கான அறிகுறிகளை தொடக்க கட்டத்திலேயே அடையாளம் கண்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.–தி மலேசியன் டைம்ஸ்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

AMARAN!!!! Komen jahat akan di padam,

Item Reviewed: காச நோய் கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு Rating: 5 Reviewed By: Johari Seman